Thursday, December 3, 2009

உலக வாழ்வு தரும் கேள்விகள்

பின்னூட்டம் என்பதன் பொருளுக்கு மேலும் செறிவு கூடியது என்னளவில் இன்று.பின்னால் வரும் கருத்து என்கிற அளவில் சௌகரியப் பொருள் கொண்டிருந்த எனக்கு இதன் முந்தைய பதிவுக்கு ஜகநாதன் தந்த பின்னூட்டங்கள் பின்+ஊட்டம் என விளங்கப்பண்ணின.

பகிர்கிறவதை விட அதிகமான ‘கேரக்டர்’களில் பின்வினைகள் வருகிறபோது மகிழ்வும் உடம்பில் ஆகார சக்தியும் மூளையில் ஆதாரத் திறப்புகளும் இருந்தால் சிந்தனையும் ஏற்படுகிறது. உலகத்தின் விரிவு பற்றி (இது பிரபஞ்ச பிரமாண்டமே போன்றது)- ஜகன் தெள்ளிதின் எடுத்துரைத்திருந்தான்.

கோபிகிருஷ்ணன் உலக அளவில் அறிந்திருக்கப்படவேண்டியவர் என நான் எழுதப்போந்தது ,யான்பெற்ற இன்பம்... என்கிற பாலூட்டு வகையையும் பாராட்டு வகையும் சேர்ந்தது.உலகம் முழுக்க அறியப்பட்டவர் என்றால் ஏசுநாதரைத்தான் சொல்லமுடியும்.ஒரு 75 சதவீதம் பேராவது அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். அதிலும் பாம்புபல்லி முதலாக எறும்பெருமை ஈறான பற்பலபற்பல உயிரிகள் அவரை அறிந்திருக்காது. உலகம் என்பது மனிதர்கள் மட்டுமன்று. ஆனால் ‘மனிதர் மாட்டு’ என்பது ஆறாம் அறிவுடைத்த இருகாலிகளின் நம்பகம்.

அங்கே இடி முழங்குது... பாடல் பாடிய தேக்கம்பட்டி சுந்தர்ராசன் இறந்துவிட்டாரா எனத் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். களையெடுக்க வந்த 50 வயது அளவிடத்தக்க எங்க ஊர்ப்பெண்மணி ‘அவரு ஏசுநோய் வந்து செத்துப்போயிட்டாரு’ என்று சொன்னபோது திகைத்துப் போய்விட்டேன். ஒன்று அவர் மதம் மாறி இறந்திருக்கவேண்டும். அல்லால் எய்ட்ஸ். ஆனாலும் உள்ளங்கை காயமாகிக் குருதி கொப்பளிக்கும் நிலையிலும் உதவிக்கரம் நீட்டுகிற தெய்வம் யேசுவன்றி வேறார்.எய்ட்ஸ் என்பதை உதவி எனப் பொருள் கொள்க.

மிகை நவிற்சியாக சிலதை வெளிப்படுத்துகிறோம்.
‘வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்குவாழும் உயிர்க்கெலாம்’ என்றும் பாடுகிற (ஏரியாவ சொல்லி சோறு கேக்கலீனா நம்மாளுக செவிக்குணவு அப்படி இப்படின்னு சொல்லி வயித்துல தட்டிருவாங்க) பாரதி, ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ‘ஜக’த்தினை அழித்திடுவோம்’ என்கிறான். ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சோத்தினை அளித்திடுவோம்’ என்று பாடுவதல்லவா சிலாக்கியம்.என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கலாம்னா பெருசே பட்னி கிடந்து ஒருநேரமோ ரெண்டு நேரமோ சோத்துக்கு வீங்கீருக்கு.

அதும் கஞ்சாப் போத தீர்ந்ததும் சோறு கிடைக்காம இருந்தா என்னதான் ஆகும் ‘அன்னந்தான் கிட்டாதெனில் அண்டந்தனை (அண்டா அல்ல) அழித்திடுவோம்’ எனவும் பாடவேண்டியதுதான்.பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் என்று செந்நாப்போதர் சொல்லவில்லையா. அப்டி...அப்டி.

ஊர் சிரித்தது என்பதையெல்லாம் விட்டொழித்து விழாக்காலம் ஆகிறது.ஆக உலகம் என இனி எழுதுவதற்கு முன் இனிக்கொஞ்சம் யோசிக்கிறேன்.ஈ ஜகமுலோனா எந்தோ உந்தி.

5 comments:

Karthikeyan G said...

//‘அவரு ஏசுநோய் வந்து செத்துப்போயிட்டாரு’ என்று சொன்னபோது திகைத்துப் போய்விட்டேன். ஒன்று அவர் மதம் மாறி இறந்திருக்கவேண்டும். அல்லால் எய்ட்ஸ்.//

:)))))))))))))))))

Nathanjagk said...

//’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ‘ஜக’த்தினை அழித்திடுவோம்'//
என்பதற்குள் ஒளிந்திருக்கும் அன்பே 'சிவ'ம் தான் காரணம் என்று தோன்றுகிறது. பசிக்கு சோறு மட்டும் படைக்கும் குணத்தில் ஒளிந்திருக்கும் அதிகார தோரணையைக் கிழித்து விட்டு வரும் ஒரு கவி அலறல் இது. சோறு போட்டுவிட்டு போவது சாமானிய புத்தி.. ஏனில்லை என்று ஜகத்தைக் கேட்பது கவிப்புத்தி!

உணவில்லாத தனியன் என்பவ​ரை காசுக்கு வக்கற்றவனாகவோ, பஞ்சதேசத்தின் ஆதிமனிதனாகவோ, காதலால் வாடுபவனாகவோ கற்பனைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை அவ்வரிகளை வாசித்துக் கொள்கிறேன்.

Nathanjagk said...

//பகிர்கிறவதை விட அதிகமான ‘கேரக்டர்’களில் பின்வினைகள் வருகிறபோது//
எல்லா இடங்களிலும் நான் செய்கிற கேரக்டர், வேர்ட், பேஸேஜ், பாரா படுகொலைதான் இது!
ந.யாமம் என் வீட்டு முற்றம் போல உணர்வதால் வந்த உற்சாகத்தில் பின்னூ கொஞ்சம் செறிவாகப் போய்விட்டது போல!
.............. மாற்றியே ஆகவேண்டும்..... சரக்கை!

Nathanjagk said...

//ஈ ஜகமுலோனா எந்தோ உந்தி..//
உந்தி!உந்தி!
சாந்த(தி)மு லேகா...
செளக்யமு லேது...!
என்று சமாதானமாக போய்விடுவது நலம்!

adhiran said...

// பாரதி, ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ‘ஜக’த்தினை அழித்திடுவோம்’ என்கிறான். ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சோத்தினை அளித்திடுவோம்’ என்று பாடுவதல்லவா சிலாக்கியம்.என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கலாம்னா பெருசே பட்னி கிடந்து ஒருநேரமோ ரெண்டு நேரமோ சோத்துக்கு வீங்கீருக்கு.//

உன்னோட 'எழுதுஅடர்த்தி' நல்லா கூடியிருக்கு/கூடியிருக்கு. எதுனா சப்ஜெக்டை எடுத்து தொடருக்கு வாப்பா. ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன்.