Wednesday, December 29, 2010

பனிக்காலை

காலைப் பனியை
அறுவடை செய்ய
வந்திருக்கும்
கருக்கருவாள் போல
வந்திருக்குது கதிரவன்.

நுனித் திவலைகளை
ஆவியாக்கி
அனுப்பிவிட்டு
திளைத்தாடுது
தாவரங்கள்.

கடவு திறந்ததும்
குதூகலித்துச்
செல்கின்றன
மேய்ச்சலுக்குக்
கால்நடைகள்.

அப்புறமும்
காலை
முடிந்துபோகிறது.

Saturday, December 25, 2010

அதி

உங்களோடு நான் இப்போது
நினைவிற்கு வரவில்லையெனில்
கதவுகளைச் சாத்துங்கள்!
கதவுக்குப் பதிலாக கதவுகள்
இருக்கும்படி உங்களை நான்
ஆசீர்வதிக்கிறேன்.

நேற்று மெய் தவிர்த்த இருப்பில்
எல்லாமும் நடந்ததாகக் கனவு
கண்டதெங்ங்னம்?

போயே போயின போயினவே
..........
தவிர்த்தல் குறித்து
மனமோ இவ்விதமுரையாடினால்
போவது எவ்விடமோ?

உரைத்துத் தீராதது
யாரிடம் பகிரவென
தன்னில் விழித்த இமைக்கணப் பொழுது
நெட்டுயிர்த்துப்
பெரிது தவித்து
எல்லா இடமும் இடுமொரு
ஓலம்
யாவருக்கும் அழிக்க உரிமையுள்ள
ஒரு கோலம்.

Saturday, December 18, 2010

தலைப்பில்லாதது தன்னுயிரில்லாதது

 கடும் மௌனமோ ஒரு நாயின்
குரைப்பொலியைப் போன்றது.
ஓசைகளற்ற மனதின் நிர்க்கதியைப்
போல அது.

யாத்திருந்த சொற்கோவை என்பது
நம்மைக் கைவிடுவது எங்ஙனம்?
நம் சொற்கள் கேலிக்குள்ளாகின்றன
அல்லது நம் கற்பனை.

நம் சொற்களுக்கும் கற்பனைகளுக்கும்
எதிரி யார்?

இவ்விரண்டுக்கும் இரண்டே இருவர்
அதிபர் ஒன்று நாம் அல்லது நமக்குத் தேவையானவர்கள்.

இதில் யாதொன்று தவறிடினும்
நினைவில் வையுங்கள்
நாம் அடிமை.

நிலா நாற்பது -11

உடுக்கள் உதிக்காத மாலை
நிலா வீசுகிறது வாளை
நீல எழில் வானம்
கோலத் தனி மோனம்.

Thursday, December 16, 2010

தெரிவித்தல்

நள்ளென் யாமம் வலைப்பூவில் வந்த எனது ‘துக்க வலி’ கவிதையை அறிமுகத்தவம் - வாராந்திர வலைச் சஞ்சிகையில் பதிவேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.pondicherryblog.com க்கு சென்றால் அதையும் வாசிக்கலாம். அதன் அனுபந்தமாக அறிமுகத்தவம் பகுதியில் எனது கவிதை உட்பட இதரர்களின் பயண, அரசியல்,கலை, இலக்கியம் சார்ந்த பல விஷயங்களையும் வாசிக்கலாம்.

இவ்வளவு நாட்கள் இந்தத் தளத்தை வாசிக்காமல் விட்டது இணைய வறுமையின் காரணமாகத்தான் என நினைக்கிறேன். நம்முடைய படைப்பு வந்தால்தான் ஒன்றை வாசிப்பது என்று ஆகிவிடுவது தேடலின் தேக்க நிலையையும் காட்டுகிறது. அறிமுகத் தவத்தின் கட்டுச் செட்டு எளிய நேர்த்தியுடன் மிளிர்கிறது. வாசித்துப் பாருங்கள்.

Tuesday, December 14, 2010

அரசியல் வானப்பிரஸ்தம்

கர்நாடகத்தில் பங்காரப்பா காங்கிரஸிலிருந்து மத சார்பற்ர்ற ஜனதாதளம் சென்றுள்ளார். ஞாபக ஆழத்தில் உள்ளே கிடந்த அவரது பெயர் கட்சி மாறியதன் மூலம் மீள் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு செய்தி வராமல் இருந்தால் அவரை நான் இறந்தவர்கள் கணக்கில் வைத்திருப்பேன். நிஜ லிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ் கணக்கில் அவரையும் வைத்திருப்பேன். செய்தி வந்ததும்தான் ஓ ஆள் இன்னம் உயிரோடு இருக்கிறார் என முடிவு செய்துகொண்டேன்.

அவரது மகன் குமார் பங்காரப்பா, அவரது விலகலால் காங்கிரசுக்கு இழப்பில்லை என்கிறார். அதிக பட்சம் அவரது இரண்டு வாக்குகள் காங்கிரசுக்கு இழப்பாகலாமாயிருக்கும். குமார் பங்காரப்பா , பங்காரப்பா போலவே அரசியலில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்ட ஒரு பெரியவரை உதாரணம் காட்டி, ‘’அவரு மாதிரி பேரன் பேத்தியோட சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே இவரு’ என்று ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். சலங்கை கட்டி ஆடிய கால்கள் சும்மாயிருக்குமா.இனி இவரது இழப்பையும் மீறி கர்நாடக காங்கிரசை வலுப்பெறச் செய்யும் பொறுப்பு ராகுல்காந்திக்கு இருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைக் கொணராமல் தூக்கம் இல்லை எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இன்னும் கர்நாடகம் போன்ற சில மாநிலங்களையும் பீகாரையும் யோசிக்கும்போது அவரது தூக்கமற்ற நிலையை எண்ணி பயமாயிருக்கிறது.

மனிதன் தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்பது நாம் அறியாததல்ல.ஆனால் பாதகமில்லை. ராகுல் காந்தியை மயக்கங்கள் காப்பாற்றும்.

Monday, December 13, 2010

துக்க வலி

நெரிக்கும் வலிக்குப்
பிந்தைய காலை அயர்வில்
 வந்துற்ற கனவில்
பால்ய காலத் தோழி வந்தாள்.
ஒரே படுக்கையில் இருந்தாள்.
தீண்டல்களுக்குப் பிந்திய
என் நச்சரிப்பில் இசைந்து
வாகுதந்து படுத்தவளின்
பாலுறுப்புகள் இடம் மாறி
இருந்தன.

பிசைதலின் வெறியில் நான்
பிரக்ஞையுடன் செயல்பட்டபோது
ஆறெனப் பெருகி வழியும்
அவளது மூத்திரம் படுக்கைத்
திண்ணையை முற்றாக நனைக்கிறது.

இருவருக்கும் பொதுவான ஒரு
அக்கா வந்து சத்தம் போடுகிறாள்.
கனவு கலைந்தபின் கனவு
பற்றி எழுகிறது குற்றவுணர்வும்
அறவுணர்வும்.

நரகத்தின் சுவர்களுக்கு கற்கள்
சேகரமாகின்றன. உட்புறம்
வெளிப்புறம்
எங்கிருந்து கட்ட ஆரம்பித்தாலும்
அது அத்தனை ஒன்றும்
நல்லதுக்கல்ல...

Friday, December 10, 2010

நிலா நாற்பது- 10

நீலவிடம் படர்ந்த
தண் பொழிவு
நீர்க் கடல் மேலாகப்
பாற்குடம்.