Sunday, March 6, 2011

கழகத்தின் ‘கை’யறு நிலை

இன்றைய தின இதழை வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி கருணாநிதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு எள்ளளவிலும் குறைவில்லாததே. தனித்த அளவில் லாப நட்டங்கள் இல்லாதபோதும்.

ரோஷக்காரர் மற்றும் தன்மானம் மிக்க நண்பர் விஜயகாந்த என அழகிரியால் சான்று புகழப்பட்ட புரட்சிக் கலைஞர் கூட தனது கூட்டணி ஒப்பந்தத்தை அ.இ.அ.தி.மு.க வுடன் இறுதி செய்துவிட்ட நிலையில் தி.மு,க, காங்கிரஸ் தரப்பு தனது ஒப்பந்தத்தை இறுதி செய்யாத நிலை நீடிக்கிறது.

அம்மட்டோ... காங்- கின் அழிச்சாட்டியம் தாளாமல் தனது மந்திரிகளையும் மத்திய அமைச்சரவையிலிருந்து பின்மாற்றிக் கொள்வதாக மு.க அறிவிக்குமளவு நிலைமை முற்றிவிட்டது.

ஐம்பதில் தொடங்கி அறுபது வரை வேட்புச் சீட்டுகள் தர தி.மு.க ஒப்புக்கொண்டபின்னும் அறுபத்தி மூன்று வேண்டும் என காங்- உறுதி காட்டுகிறது.

அதுகூடப் பரவாயில்லை. அந்த அறுபத்துமூவரையும் தங்கள் தொகுதியை எடுத்துக்கொண்டு மீதத்தை தி.மு.க வுக்குத் தருவோம் என அவர்கள் கூறுவது இதுகாறும் நாடு காணாத வினோதமாகும். கூட்டணிகளுக்கு தர்மம் என ஒன்று உண்டா? எனச் சிலர் வினவலாம். ஆனாலும் உண்மை என்னவென்றால் கூட்டணிகளுக்கு தர்மம் உண்டு ;ஆனால் தர்மம் தற்காலிகமானது.

அறம் மீறிய ஆசையிலும் கண்மூடித்தனத்திலும் காங்கிரஸ் இந்தப் பிடிவாதம் காட்டுகிறது. இது தனித்து நின்று தி.மு.க வெற்றி பெறும் என்று துருத்தி ஊதுகிற கி.வீரமணியின் கண்மூடித்தனத்திற்கு ஒப்பானது.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மூடநம்பிக்கை இல்லாமல் வாழ்வை ஓட்டமுடியாது என வீரு நிரூபிக்கிறார்.

தனது நீண்ட நெடுநாள் அனுபவத்தில் இப்படியான சிக்கலை அனுபவித்ததில்லை என்கிறார் கருணாநிதி. அவர் மட்டுமல்ல இந்தியாவில் எந்தக் கூட்டணியும் இப்படியான நிலையை அனுபவித்திருக்குமா என்பது ஐயமே.

என்ன செய்வது ’மேன் மக்கள்த் தொடர்பு சதிகாரி’ நீரா ராடியா இல்லாமல் இருந்திருந்தால் கதைப் போக்கு வேறுமாதிரி இருந்திருக்கும்.கம்பு ஊன்றி நடக்கும் கடைக் காலத்தில் கருணாநிதிக்கு காலம் அனுப்பிவைத்தை வசந்த சேனை இந்த நீரா. ஜனகீயமும் சாணக்யமும் நன்கறிந்த தமிழகத்தின் இந்நாள் முதல்வர் தொடுத்த அஸ்திரம்தான் மத்திய அவையில் தனது அமைச்சர்களை ராஜினாமாக் கோரவைப்பது.

இன்றைக்கு ஃப்ளைட் பிடித்து இரவு குலாம் நபியோ வீரப்ப மொய்லியோ வருவார்கள் டெல்லியிலிருந்து சென்னைக்கு. அறுபத்தியொரு இடங்கள் காங்கிரசுக்கு....ஆயிரத்தொரு இடர்கள் தி.மு.கவுக்கு. 

2 comments:

சரவணன் said...

நான் நினைக்கிறன், விஜயகாந்த் அ.இ.அ.தி.மு.க வோடு கைகோர்த்த அடுத்த சில நாட்களில் காங்கரசை கலட்டி விட்டது முதல்வரின் சாணக்கியம் என்று. இப்போது காங்கரஸ் ஜெவிடம் 60 கேட்டு கூடு சேர முடியாது, மூன்றாவது அணி சேர்க்க ஆளும் கிடையாது. காங்கிரஸ் கடந்த ஒரு மாதமாக செய்த குடைச்சலை தி.மு.க. பொறுத்திருந்தது இந்த தருனத்திர்க்காகத்தான். இனி பேச்சு வார்த்தையில் தி.மு.கா கை ஓங்கலாம்.

vijayan said...

சிவா நலமா,ஆறுமுகங்களின் ராஜினாமா என்று தமிழின தலைவர் கரடியாக கத்தினாலும் வடபுல கூட்டாளிகள் புல்லே என்று இருக்கிறார்கள், கைவசம் ஏதோ strong -ஆக இருக்கும் போலிருக்கிறது, ஆறுமுகங்களும் எவ்வளவு நேரம் ராஜியை தள்ளி வைத்துகொண்டே இருப்பது. என்ன இந்த தமிழின தலைவருக்கு வந்த சோதனை.