Wednesday, March 9, 2011

தொகுதி மாற்றங்களும் சில ஏமாற்றங்களும்

தி.மு.க தரப்பு தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட பாவனையில் காட்சியளிக்கிறது. அரசு கட்டிலில் அமர்ந்து அவர்கள் தனிப் பெரும்பான்மை எட்டவேண்டுமானால் கிட்டத்தட்ட போட்டியிடுகிற அத்தனை இடங்களிலுமே வென்றாக வேண்டும் என்கிற அளவு நிலையில் தி.மு.க வின் ஒதுக்கீடு அமைந்திருக்கிறது.
முதலில் மிகத் துரிதமாகக் காட்சியளித்த அ.தி.மு.க இப்போது சுணக்கம் காட்டுகிறது. விரைவில் அது தனது பங்கீட்டை முடிக்கவேண்டுமெனில் கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.தி.மு.கவுடன் இணக்கம் காட்டவேண்டும். மூன்றுக்கும் தலா பத்துக்கும் குறைவாக நல்குதலே ஜெயலிதாவுக்கு உவப்பானதாக இருக்கலாம். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த அளவில் மார்க்சிஸ்டுகள் பெறுகிற அதே அளவை இந்திய கம்யூனிஸ்டுகள் பெறாவிட்டால் தத்துவார்த்த உளவியல் சிக்கலின் பாற்பட்ட தொய்வுக்கு அவர்கள் ஆளாவார்கள் என்றாலும் ஸ்திதிகதிகளை ஆலோசிக்கும்போது மார்க்சிஸ்டுகள் கூடுதலான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். மொத்தம் இருபத்தை ஐந்து சீட்டுகளுக்குள் இந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் அடங்கிவிடும் என்கிற நிலையில் அடுத்து நிற்பது ம.தி.மு.க தான்.

ஏறக்குறைய அ.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியாகவும் விசுவாசியாகவுமே மாறிப்போய்விட்ட வை.கோவின் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பது கேள்வி. மனதளவில் அவர் இருபதுக்குத் தயாராகிவிட்டார். இருபது ஆட்கள் இருக்கிறார்களா? என்பது அ.தி.மு.கவின் கேள்வியும் பெரும்பான்மைப் பொது மக்களின் கேலியுமாகும். தலைவன் மற்றும் தலைமை மட்டுமே இயக்கமாக மாறிவிடாது என்பதன் கனத்த உதாரணமாக ம.தி.மு.க இலங்குகிறது. அடிமாட்டு விலைக்கும் தோல்விலைக்கும் இடையில் ஒரு கணக்கைப் போட்டு பதினைந்து பதினாறு சீட்டுகளை வை.கோவுக்கு ஜெயலலிதா வழங்குவார் என நினைக்கிறேன்.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் மண்ணிலும் கால்பதித்து ஒரு புயலாய் ஒரு சுறாவளியாய் ஒரு சண்டமாருதமாய் அலை வீசி அடிக்கிற ஆற்றலும் உடற்றிறனும் தொண்டுள்ளமும் தொண்டை வளமும் அவருக்கு மட்டுமே உள்ளது என்பதால் ஜெயலலிதா அவர்மீது கருணை கொள்வார்  என நம்புகிறேன். இன்றைய (09.03.2011) தினமணியில் குறிப்பிட்டுள்ளது போல மூன்றாவது அணியும் அமைந்து தேர்தல் களத்தில் வகைதொகை இல்லாத  காட்சி மாற்றங்கள் பார்க்கக் கிடைக்காது என நம்புகிறேன். விஜயகாந்தை மட்டும் முழுக்க நம்பி மற்றவர்களையும் தன்னையும் ஒருசேர நட்டாற்றுக்கு ஜெயலலிதா இழுத்துக் கொள்ளமாட்டார்.

இப்போது தொகுதிப் பங்கீட்டில் உற்பத்தியாகப் போகும் இழுபறிக் குழப்பங்கள் என்னவென்றால் சீரமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப் பட்ட தொகுதி வரைபடங்கள்தான். அது தீவிரமான சர்ச்சைகள் ஊடல்கள் வட்டார ஆட்களின் மனமுறிதல்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக அமையப்போகிறது.

நான் நன்கறிந்த தொகுதி எங்கள் தொகுதியான வெள்ளகோவில், அந்தத் தொகுதி இந்தத் தேர்தலில் இல்லை. அத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் இப்போது தாராபுரத்திலும் போட்டியிட முடியாது அது ‘தனி’த் தொகுதி.
ஒட்டன் சத்திரத்தில் போட்டியிடலாமெனில் அது கொறடா சக்கரபாணியின் தொகுதி. மாவட்டச் செயலாளராகவும் இருக்கிற சாமிநாதன் ஒரு வேளை காங்கேயத்தில் போட்டியிடலாம் என்றால் அது விடியல் சேகருக்கான காங்கிரஸ் தொகுதியாக இருக்கிறது.

இப்போது சாமிநாதன் நெடுஞ்சாலைகளில் தனது தொகுதி எது எனத் தேடிக்கொண்டிருக்கிறார். விடியல் சேகர் தனது ‘அஸ்தமனம்’ நெருங்கிவிட்டதோ என அச்சப்பட்டிருக்கக் கூடும். தமிழக விரிவிலும் அளவிலும் இதுபோல எண்ணற்ற இக்கட்டுகள் பெருகியிருக்கும் நிலையில் எல்லாக் கட்சிகளுக்கும் சிக்கல்கள். இவை சிந்தனையை வேண்டுகிற சிக்கல்களாயிருப்பது மேலும் தலைவலி.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் கருணாநிதியின் பலம் என்னவெனில் தங்கபாலு காங் தலைவராயிருப்பது. ஜெயலலிதாவின் பலம் என்னவெனில் ஜெயலலிதா ஜெயலலிதாவாக இருப்பது.

No comments: